ஸ்டார்ட் அப் தொழில்கள்: எளிதில் ஜெயிக்க 10 கட்டளைகள்

ஸ்டார்ட் அப் தொழில்கள்: எளிதில் ஜெயிக்க 10 கட்டளைகள்!

சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கும் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை சமீப காலமாக வேகமாக அதிகரித்து வருகிறது. பல ஆயிரம் ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்டாலும் சில நூறு நிறுவனங்களே தொழிலில் ஏற்படும் சிக்கல்களிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் தப்பித்து ஜெயித்து வருகின்றன. புதிதாக தொழில் தொடங்கும் ஸ்டார்ட் அப்கள் எளிதாக வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்

1 சட்ட விதிமுறைகள்!

எந்தத் தொழில் செய்வதாக இருந்தாலும் அதைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்வது, முறையான அனுமதி பெறுவது முக்கியம். இந்த முக்கியமான வேலையைப் பிறகு செய்துகொள்ளலாம் என நினைக்கக் கூடாது. இதைச் சரியாகச் செய்தாலே, நீங்கள் வழங்கும் சேவை அல்லது உற்பத்தி செய்யும் பொருட்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தேவையில்லாத பிரச்னைகளையும் இதன் மூலமாகத் தவிர்க்க முடியும். சரியாக வரி செலுத்துவதும், வாங்கும் பொருட்களுக்கு உரிய பில் வைத்திருப்பதும், விற்பனை செய்யும் பொருட்களுக்கு உரிய பில் வழங்குவதும் முக்கியமான விஷயங்கள் ஆகும்.

2 அலுவலகமாக இயங்க வேண்டும்!

தொழில் ஆரம்பித்தபிறகு செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் அலுவலக ரீதியாகவே செய்ய வேண்டும். நீங்கள் வேறு அலுவலகத்துக்கு வேலைக்குச் சென்றால் எப்படி நடந்துகொள்வீர்களோ, அதேபோல உங்களின் சொந்த தொழிலிலும் நடந்துகொள்ள வேண்டும். எனவே, அனைவருக்கும் பொதுவான அலுவலக விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அந்த விதிமுறைகளைத் தொழில் துவங்குபவர்கள் கட்டாயம் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

காலதாமதமாக அலுவலகத்துக்கு வர நேரும்போது அந்தத் தகவலை உரிய நபருக்கு முறைப்படி தெரியப்படுத்துவது, விடுமுறை எடுத்தால் அதற்கான கடிதம் தருவது போன்றவற்றை எல்லா ஊழியர்களும் அவசியம் செய்ய வேண்டும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுடன் இணக்கமான உறவு வைத்திருந்தாலும் அலுவலகத்தை அரட்டை அரங்கமாக ஆக்கிவிடவும் கூடாது.

3 நண்பர்களும் பார்ட்னர்களே!

உடன் படித்த நண்பர்களுடன் தொழில் துவங்குபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இப்படி நண்பர்களுடன் தொழில் தொடங்கும்போது அவர்களை சக ஊழியர்களாகவே அலுவலகத்தில் நடத்த வேண்டும். நீங்களும் அவ்வாறே நடந்துகொள்வது நல்லது. நண்பர்கள் எந்தத் தவறு செய்தாலும் அதை உடனே சரிசெய்ய வேண்டும். அந்தத் தவறு அடுத்த முறை நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வது முக்கியம். நண்பர்தானே என நினைத்து, அந்தத் தவறை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. மேலும், அந்தத் தொழிலில் அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது என்பதை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து வைக்க வேண்டும்.

4 ஆட்களைப் பணியமர்த்தல்!

பணியாளரைத் தேர்ந்தெடுப்பதற்குமுன் அவருடைய திறமை குறித்துத் தெரிந்துகொள்வது அவசியம். ஊழியர்களை வேலைக்கு எடுக்கும்போது உங்கள் தொழிலில் தரத்தை உயர்த்தும் வகையில் திறமையுள்ள பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்கள் தொழில் தொடர்பான எல்லாத் துறைகளிலும் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான திறமை உங்கள் ஊழியர்களிடம் நிறைவாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். திறமையற்ற ஊழியர்களை வைத்து ஸ்டார்ட் அப்கள் ஜெயிக்க முடியாது என்பது நிச்சயம்.

5 முப்பது விநாடிக்குள்...!

நீங்கள் புதிதாக தொழில் தொடங்கும்போது அந்த தொழில் குறித்து எளிதில் விளக்கிச் சொல்ல முடிகிற மாதிரி இருக்க வேண்டும். உங்கள் தொழில் பற்றி எதுவும் தெரியாத ஒரு சாதாரண மனிதனாக இருந்தாலும்கூட முப்பது விநாடிக்குள் சொல்ல முடிகிற மாதிரி உங்கள் தொழில் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் உங்கள் தொழிலைப் பற்றி பலரும் எளிதில் தெரிந்துகொள்வார்கள். இதனால் உங்கள் நிறுவனத்தின் பிராண்ட் இமேஜ் அதிகரிக்கும் அதேவேளையில், தொழில் முதலீடு உங்களைத் தேடி வரவும் வாய்ப்புண்டு.

6 திரும்ப திரும்ப வரும் வாடிக்கையாளர்கள்!

ஒரு தொழில் வெற்றி அடைய வேண்டுமெனில், அது நிறைய வாடிக்கையாளர்களை சென்றடைய வேண்டும். உங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் திரும்ப திரும்ப வந்து வாங்கும்போதுதான் உங்கள் விற்பனை அதிகரிக்கும். இதற்கு தரம், விலை, டிசைன் என பல விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

7 நிபுணத்துவத்தை தேடி!

எந்தத் தொழிலானாலும் தொடக்கத்தில் கிடைக்கும் வெற்றியில் திருப்தி அடைந்து அந்த நிலையிலேயே நின்றுவிடக் கூடாது. புதிய தயாரிப்புகளை தரமாக தர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நிபுணர்களுடன் தொடர்ந்து பேச வேண்டும். உங்கள் துறை தொடர்பான கருத்தரங்குகள், கண்காட்சிகள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ நடந்தால், அதில் கலந்துகொள்ள தவறக் கூடாது. இதன் மூலமே உங்கள் தயாரிப்பின் தரத்தை உயர்த்த முடியும்.

8  தேவையான நிதி!

நீங்கள் தொடங்கிய தொழில் தொய்வில்லாமல் செல்ல வேண்டுமெனில், போதுமான நிதி உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பல சமயங்களில் குறைவான நிதியை வைத்துக் கொண்டு தொழில் செய்பவர்களே பலர். பிற்பாடு திடீரென நிதித் தட்டுப்பாடு ஏற்படும்போது குறுகிய கால கடன்களை நாட வேண்டிய அவசியம் ஏற்படும். அதிக வட்டியில் வாங்கப்படும் இது போன்ற கடன்களை சரியாக நிதித் திட்டமிடல் செய்வதன் மூலம் தவிர்க்க முடியும்.

9 வங்கிகளுடன் நெருங்கிய தொடர்பு!

உங்கள் தொழில் வளர்ச்சிக்கு தேவையான நிதி உங்களுக்கு தேவை இல்லை என்றாலும்கூட வங்கி அதிகாரிகளையும் தொழில் முதலீட்டாளர்களையும் அடிக்கடி சந்திப்பதை தவிர்க்கவே கூடாது. இப்படியான சந்திப்பு நம் தொழில் வளர்ச்சி குறித்து அவர்கள் அறிந்துகொள்ள உதவும்.

இதனால் புதிதாக முதலீடு தேவை என்று வரும்போது தயங்காமல் கேட்க முடியும். தொழில் தொடர்பான விவரங்களும் அவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால், அவர்களும் அதிகம் யோசிக்காமல் தொழில் கடனையோ அல்லது புதிய முதலீட்டையே தர வாய்ப்புண்டு.

10 நீங்கள் ஒரு வியாபாரி!

நீங்கள் செய்வது எந்த தொழிலாக இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு விற்பனையாளர் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் தயாரிப்புகள் எப்போதும் விற்பனை ஆகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் தயாரிப்புகள் விற்பனையானால் மட்டுமே உங்கள் தொழில் ஜெயிக்கும். இல்லாவிட்டால், உங்கள் தயாரிப்புகளை விட்டுவிட்டு, உங்கள் தொழிலையே விற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.