உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கிறதா...?

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கிறதா...?

சம்பளம் மற்றும் வருமானத்தில் செலவுகளை சுருக்கி பலர் பணத்தை மிச்சப்படுத்திவிடுகிறார்கள். ஆனால், அதனை சரியாக முதலீடு செய்வதில்தான் இருக்கிறது, புத்திசாலிதனம்.

நீங்கள் உழைத்து சம்பாதித்தது மூலம் உருவான உங்கள் சேமிப்பு பணம், உங்களுக்காக உழைக்க வேண்டும். அதனை வங்கி சேமிப்பு கணக்கு அல்லது உண்டியலில் போட்டு வைத்தால் அது பெருகாது. உங்கள் பணத்தை முதலீடு செய்யாமல் வைத்திருந்தால் அது, அதன் மதிப்பை இழந்துவிடும்.

உதாரணத்திற்கு, உங்களிடம் ரூ.1,000 இருக்கிறது. அதனை 10% வட்டியில் முதலீடு செய்தால் அடுத்த ஆண்டில் அது ரூ.1,100 ஆக பெருகி இருக்கும். அதனை முதலீடு செய்யவில்லை என்றால் ரூ.1,000 ஆகவே இருக்கும்.

ஆனால், அடுத்த ஆண்டில் பணவீக்க விகிதம் 7% அதிகரித்திருப்பதாக வைத்துக் கொண்டால், உங்களின் பணம் அதன் மதிப்பில் 7% குறைந்திருக்கும். இதுவே முதலீடு செய்திருந்தால், பணவீக்க விகிதத்தை சரிகட்டியிருந்தாலும் உங்களின் பணம் 3% மதிப்பு அதிகரித்திருக்கும்.

நம் பணம் நமக்காக உழைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன் விளக்கும்போது, ''உங்களின் உழைப்புக்கு சம்பளம், ஊக்கத் தொகை (போனஸ்) கிடைக்கும். உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கும்போது, அதாவது பணத்தை சரியாக முதலீடு செய்திருக்கும்போது வட்டி, வருமானம், டிவிடெண்ட் போன்றவை கிடைக்கும்.

நம்முடைய பணம் நமக்காக உழைக்க வேண்டும். நம் முதலீடு உழைப்பதன் மூலமான பணத்தைக் கொண்டு, செலவுகளை பார்த்துக்கொள்ளும் போதுதான், நம்மால் நாம் ஆசைப்பட்ட வாழ்வை, கனவை, நனவாக்கிக்கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு, ஒருவர் கடந்த 15 ஆண்டுகளில் செய்த முதலீட்டில் கிடைத்த சொத்து, அடுத்த 5 ஆண்டில் அவர் உருவாக்கப் போகும் சொத்துக்கு சமம். உடனே 15 ஆண்டு உருவாகும் சொத்து, வெறும் 5 ஆண்டுகளில் கிடைக்கிறது என்று நினைக்கக்கூடாது. உண்மை என்ன என்றால் 15 ஆண்டுகளுக்கான பணத்திற்காக நீங்கள் வேலை செய்கிறீர்கள். அதற்கு பிறகு அந்தப் பணம் உங்களுக்காக வேலை செய்யும்" என்றார்.

மேலும், இதனை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால், ''மாதத்துக்கு 16,320  வீதம் 15 வருடம் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், ஆண்டுக்கு சராசரியாக 14% வருமானம் கிடைத்தால் அந்த முதலீடு ரூ.1 கோடியாக அதிகரித்திருக்கும்.

இந்த 1 கோடி ரூபாயை எடுக்காமல் வைத்திருந்தால், ஆண்டுக்கு சராசரியாக 14% வருமானம் கொடுப்பதாக கணக்கிட்டால், அடுத்த ஐந்து வருடத்தில், இந்த சொத்தின் மதிப்பு மேலும் ரூ.1 கோடி அதிகரித்து, ரூ.2 கோடியாக உயர்ந்திருக்கும். கிட்டதட்ட ஆண்டுக்கு ரூ.20 லட்சம் அதிகரித்து இருக்கும்" என்றார்.