கணவன்- மனைவி ஜாயின்ட் இன்ஷூரன்ஸ்... என்ன லாபம்?

கணவன்- மனைவி ஜாயின்ட் இன்ஷூரன்ஸ்... என்ன லாபம்?

ஒவ்வொருவருடைய தேவைக்கு ஏற்றாற்போல  பலவகையான காப்பீட்டுத் திட்டங்கள் தற்போது சந்தையில் உள்ளன. அதில் ஒன்றுதான், கணவன் - மனைவிக்கான கூட்டுக் காப்பீட்டுத் திட்டம். அது என்ன கூட்டுக் காப்பீட்டுத் திட்டம்?

என்ன திட்டம்?

ஏற்கெனவே ஆயுள் காப்பீடு வைத்திருப்பவர் தனது பாலிசியில் இன்னொருவரைச் சேர்த்துக்கொள்வதுதான் கூட்டுக் காப்பீட்டுத் திட்டம். குறிப்பாக, பொருளாதார ரீதியாக பாலிசிதாரரை சார்ந்திருப்பவரை இந்த பாலிசியில் சேர்த்துக் கொள்ளலாம்.  திருமணத்துக்குப்  பிறகு மனைவியையோ அல்லது தொழில் கூட்டாளியையோகூட இந்த பாலிசியில் இணைத்துக் கொள்ள முடியும். தனிநபர் பாலிசியில் கிடைக்கும் அனைத்து பலன்களும் இந்த பாலிசியிலும் பெற முடியும்.

இந்த பாலிசியை ஒரே கவரேஜ்  அல்லது இரண்டு வெவ்வேறு கவரேஜ்  கொண்ட பாலிசியாகவோ எடுத்துக் கொள்ளலாம். ஒரே கவரேஜ் கொண்ட பாலிசியில் ஒருவர் இறக்க நேரிட்டாலே காப்பீட்டுத் தொகை கிடைத்துவிடும். இரண்டு கவரேஜ் கொண்ட பாலிசியில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்கான தொகை வழங்கப்பட்டபின்பும், உயிருடன் இருப்பவரின் பாலிசி தொடரும்.

சிறப்பு அம்சங்கள்!

கூட்டு ஆயுள் காப்பீடு என்றாலும், இதிலுள்ள முக்கியமான வசதி சிங்கிள் பாலிசி போலவே நிர்வகிக்க முடியும். ஒரு நபருக்கு என்கிற போது சிங்கிள் பாலிசியாக வைத்துக்கொள்ளலாம். பாலிசியில் வேறொருவரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறபோது கூட்டு பாலிசியாக நிர்வகிக்க முடியும்.

மேலும், கணவன் - மனைவி இருவருமே சேர்ந்து சொத்துகள் வாங்குவது, அடமானம் வைப்பது போன்றவைகளைச் செய்வதால்,  காப்பீட்டுத் தேவைகளைத் திறம்பட நிர்வகிக்க கூட்டு பாலிசி திட்டம் வழி வகுக்கும்.

பணத்தை சரியாகப் பயன்படுத்துதல்!

இந்த பாலிசியில் கிடைக்கும் இன்னொரு முக்கியமான வசதி, காப்பீட்டுக்கான செலவு குறைவதாகும். இந்தவகை பாலிசியில், முதல் கவரேஜுக்கான தொகை வழங்கப்பட்டபின், தொடர்ந்து கட்டவேண்டிய ப்ரீமியம் குறைந்துவிடும். இரண்டு தனித்தனி பாலிசிக்கான செலவைவிட கூட்டு பாலிசியில் செலவு குறைவு.

எளிதில் மாற்றிக்கொள்ளும் தன்மை!

கூட்டுக் காப்பீட்டில் முக்கியமான அம்சம் இந்த பாலிசியை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது. இந்தவகை பாலிசியில் ஒருவர் டேர்ம் ப்ளான் எடுத்துவிட்டு, பின்னர் அவருடைய மனைவி/கணவனைச் சேர்த்துக் கொண்டு கூட்டு பாலிசியாக மாற்றிக்கொள்ள முடியும். ஒருவேளை கூட்டுக் காப்பீட்டிலிருந்து விவாகரத்து போன்ற காரணங்களால் ஒருவரை விலக்க வேண்டியிருக்கிறது என்றால், அதற்கும் இந்தக் காப்பீடு வழி செய்கிறது.

பாதுகாப்பு!

இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் குடும்பத்துக்கு  அதிகமான பாதுகாப்பைத் தருகிறது. பாலிசிதாரர் இறந்தவுடன் குடும்பத்துக்கான உடனடி பணப்பலன்களை அளிக்கிறது. அதேசமயம், இரண்டு முதிர்வுகால பாலிசி என்கிறபோது குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு பயன்படுவ தாகவும் இருக்கும். பொருளாதார ரீதியாக குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளையும் இந்த பாலிசி கவனத்தில்கொள்கிறது.

கடன்களுக்கு ஈடாக...

கடன்களுக்கு ஈடாக இந்த பாலிசியைப் பயன்படுத்த முடியும் என்பதுவும், இந்த பாலிசி மூலம் கிடைக்கும் இன்னொரு முக்கியமான சாதகம்.  எதிர்பாராத இறப்பு காரணமாக குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் நேரத்தில், கிடைக்கும் காப்பீட்டுத் தொகை நிலுவையில் இருக்கும் கடனைத் தீர்ப்பதற்கு பயன்படும்.

தொழிலில் இருக்கும் கூட்டாளிகளுக்கும் இந்தவகை பாலிசி, தொழில் நஷ்டங்களைத் தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.

காப்பீடு குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் தனிநபர் காப்பீடு எடுப்பதைவிட, இந்தக் கூட்டுக் காப்பீடு எடுப்பது இரட்டை பாதுகாப்பை வழங்குகிறது. ஒருவரே பாலிசியை நிர்வகிப்பதைவிட, இரண்டு நபர்கள் பாலிசியை நிர்வகிக்கும் வாய்ப்பும் இதில் உள்ளது. எதிர்பாராத அசம்பாவிதங்களிலிருந்து குடும்பப் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்வதை இந்தவகை கூட்டு பாலிசிகள் தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.