விடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன், நிர்வாக இயக்குநர், மதுரா டிராவல்ஸ்.

விடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன், நிர்வாக இயக்குநர், மதுரா டிராவல்ஸ்.



நான் அதிகம் படிக்கவில்லை; ஆனாலும் நான் ஜெயித்தேன். காரணம், என் விடாப்பிடியான உழைப்பு.

ஆரம்பத்தில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் தினசரி ஐந்து ரூபாய் கூலிக்கு வேலையில் சேர்ந்தேன். வெளிநாட்டுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை உரியவர்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதே என் வேலை. அந்த வேலையை செய்துகொண்டிருந்தபோதுதான் எனக்கான திருப்புமுனை வந்தது.
ராமேஸ்வரத்திலிருந்து கொழும்புக்கு தினசரி பயணிகள் கப்பல் சென்றுவரும். அந்த கப்பலில் செல்கிற வியாபாரிகளுக்குத் தேவையான விசாவை நான் வேலை பார்த்த நிறுவனம் வாங்கித் தந்தது. இந்த விசாவை தர ஒருமுறை நான் ராமேஸ்வரம் போனேன்.

 நான் போன ரயில் ராமேஸ்வரத்திற்கு அருகில் பாம்பன் தூக்கு பாலம் ரிப்பேர் காரணமாக மண்டபம் ரயில் நிலையத்திலேயே நின்றுவிட்டது.  பஸ் பாலம் அப்போது இல்லை. காலை ஒன்பது மணிக்குள் பயணிகளுக்கான  பாஸ்போர்ட், விசாவை அவர்களிடம் கொண்டு போய் சேர்த்தாக வேண்டும்.
நான் எப்படியாவது இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனே ரயில் தண்டவாளத்தில் நடக்கத் தொடங்கினேன். பாலத்தைக் கடந்துவிட்டால் எப்படியாவது துறைமுகத்தை அடைந்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.
ஆனால், பாலத்தைக் கடப்பது சாதாரணமாக இல்லை. கடல் சீற்றமாக இருந்தது. இரும்பு பாலத்தின் வழி நெடுக கிரீஸ் தடவியிருந்ததால் கால் வழுக்கியது. திரும்பிப் போகலாம் என்றால் கஷ்டப்பட்டு பாதித் தூரத்தைக் கடந்திருந்தேன். திரும்பிச் செல்கிற தூரத்தை முன்னேறிச் செல்வோம் என்கிற துணிவோடு, சூட்கேஸை முதுகோடு கட்டிக்கொண்டு பாலத்தில் தவழ்ந்தபடி கடந்து போனேன்.

கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறோம், எப்படி தக்க வைத்துக்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.