பத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்!

பத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்!


சமீபத்திய சென்னைப் பெருமழையில் வீடு, கார் சேதமானதுடன், பலரது விலை மதிப்பற்ற ஆவணங்களும் தண்ணீரில் நனைந்து நாசமாகின. பல இடங்களில் உடனடி ஆவணங்கள் வழங்கும் முகாம் நடத்தி, பலரது ஆவணங்களை தரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், மழை, வெள்ளம், தீ என எந்தவிதமான இன்னல்கள் வந்தாலும் அதிலிருந்து உங்கள் ஆவணங்கள் எந்த வகையிலும் தீங்கு விளையாமல் பத்திரமாக வைத்திருப்பதற்கான வழி இப்போது பிறந்துள்ளது, அதுவும் இலவசமாக நயா, பைசா செலவில்லாமல்.

டிஜி லாக்கர் (Digi Locker) எனப்படும் இணையப் பெட்டகம்தான், நம்மிடம் இருக்கும் ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கும் புதுமையான வழி. இது ஆன்லைனில் இயங்குவதாகும் (Online Document Storage Facility). இதன் மூலம் நீங்கள் எந்தவொரு பிரச்னையும் இன்றி ஆவணங்களைப் பாதுகாத்து, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தேவைப்படும் நபருக்கோ, துறைக்கோ அனுப்ப முடியும்.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ஆவணங்களையும் தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘பேப்பர் இல்லா செயல்பாடு’    (Paperless Governance) என்கிற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்திய அரசால் டிஜிட்டல் (Digital India) திட்டத்தின் ஒரு அங்கமாக உருவாக்கி தரப்பட்டிருப்பதுதான் இந்த டிஜி லாக்கர்.



தேவைகள்!

இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த உங்களிடம் சில அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும். இதனைப் பயன்படுத்த ஆதார் எண்ணும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணும் உங்களிடம் அவசியம் இருக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் அவர்களது இருப்பிட உறுதிக்கென பிற ஆவணங்களை கொடுத்து அதன் சரிபார்ப்பிற்கு பின்னர் இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த முடியும்.

பதிவு செய்வது அவசியம்!

இந்த டிஜி லாக்கரில் பதிவு செய்த பின்புதான் இந்தப் பெட்டகத்தை நீங்கள் பயன்படுத்த இயலும். இதற்கென இருக்கும் இணையதளத்திற்குச் சென்று (www.digilocker.gov.in),  உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்தபின்பு, நீங்கள் குறிப்பிடும் மொபைல் எண்ணுக்கு ஒரே முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பப்படும். உடனடியாக அந்த பாஸ்வேர்டு பதிவு செய்தபின்பு நமது கணக்கு ஒன்று, இதர விவரங்களை தெரிவித்தவுடன் திறக்கப்படும். பின்னர் உங்களது யூசர் நேம் (User Name) பாஸ் வேர்டைக் குறிப்பிட்டு உங்களுக்கான இந்தப் பெட்டகத்தை பயன்படுத்தலாம். ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, மின் வருடல் மூலமான ஆவணங்களாக இணையப் பெட்டகத்தில் இணைக்கப்படும்.

ஆவணங்களின் சேமிப்பு!

நமது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, இந்த இணையப் பெட்டகத்தில் ஃபைல்களாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அவைகள் தனித்தனியே சேமித்து வைக்கப்படும் விதமாக, உங்களால் பதிவேற்றம் செய்விக்கப்படும் ஆவணங்கள், அப்போதே தனித்தனி ஃபைல்களில் உங்கள் ஆதார் எண்ணின் தனித்துவத்தின்படி சேமிக்கப்படும்.

எல்லாம் முடிந்து இந்தப் பெட்டகத்தில் உள்ள உங்கள் சுய விவரப்பக்கத்துக்கு சென்றால், அதில் உங்கள் புகைப்படம், பெயர், முகவரி போன்ற ஆதார் அட்டை விண்ணப்பத்தின் போது நீங்கள் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து விவரங்களும் அந்த இணையதளத்திலிருந்து பெறப்பட்டு இங்கு பகிரப்பட்டிருக்கும்.

அளவு!

தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம். கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்து இதன் அளவும் உயர்த்தப்படவுள்ளது.



பாதுகாப்பு!

இது அனைத்து வகையிலும் பாதுகாப்பும் கொண்ட ஒரு சிஸ்டம். இதன் அமைப்பு மற்றும் மையமானது ஐஎஸ்ஓ 27001 (ISO 27001) சான்றிதழ் பெறப்பட்டதால், உங்கள் தனித்துவம் முழுவதுமாக பாதுகாக்கப்படும். அனுமதி இல்லாத பிற நபர்களின் பயன்பாடு ‘தானியங்கி நேரப் பாதுகாப்பு’ (Auto Time Log-Out) மூலம் தடை செய்யப்படும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பயனாளர் மட்டுமே இந்தப் பெட்டகத்திலிருந்து பயன்படுத்த முடியும். ஆதார் எண் இணைக்கப்படாதபட்சத்தில் பயனாளர்களின் ஆவணப் பிரிவில் ஆவணங்கள் இணைக்கப்பட்டதே காட்டப்படாது.

ஆவணங்களின் பயன்பாடு!

இணைய கையெழுத்து (e-Sign) எனும் தொழில்நுட்பம் இந்த இணையப் பெட்டகத்தில் முழுமையான அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கம்பெனி பதிவகங்கள் மற்றும் வருமான வரித்துறைகளில்தான் இந்த இணைய கையெழுத்து பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த டிஜி லாக்கரில் இணைய கையெழுத்து தொழில்நுட்பம் இந்தப் பெட்டகத்தில் உள்ள ஃபைல்களையும், ஆவணங்களையும், கையெழுத்து செய்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு அனுப்பவேண்டிய ஆவணங்களைக்கூட இந்த முறையில் அனுப்ப முடியும். மேலும், ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இந்தப் பெட்டகத்தில் இருந்து பதிவேற்றி நேரடியாக அனுப்ப இயலும். இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படும்.



கூகுள் போன்ற இதர தளங்களிலிருந்து செய்யப்படும் அவ்வாறான பதிவேற்றங்கள், இதுவரை அதன் மூலங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அரசால் அங்கீகாரம் செய்யப்படு வதில்லை. ஆனால், இந்த தளத்தில் இருந்து செய்யப்  படும் ஆவணப் பதிவேற்றத்துக்கு அரசு அங்கீகாரம் தந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் சுமார் 14 லட்சம் ஆவணங்களை இதில் பதிவேற்றி இருக்கிறார்கள்.

எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானா லும் உங்கள் ஆவணங் களை இணையம் மூலம் பகிர்ந்துகொள்ளலாம் (Any Time, Any Where, Share your Documents Online) என்ற கோட்பாட்டில் அரசால் துவங்கப் பட்டுள்ள, வரவேற்று பயன்படுத்தவேண்டிய அரசின் பெட்டகம் இது.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது ஆவணங்களை தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம்.