ஆதார் கார்டு வாங்கியதும் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஆதார் கார்டு வாங்கியதும் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?







பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்திருக்கிறது. பல பள்ளிகளில் மாணவர்களை இன்று வகுப்புக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் ஆதார் கார்டுடன். எஸ்.எஸ்.எல்.ஸி மார்க் ஷீட்டில் தமிழில் பெயர் எப்படி வர வேண்டும் என்பதை ஆதார் கார்டு பார்த்துதான் எழுதப் போகிறார்களாம்.

இன்னும் நாம் நினைத்தே பார்க்க முடியாத விஷயத்துக்கெல்லாம் ஆதார் கார்டு அவசியமாகலாம். உச்ச நீதிமன்றம் “அது கட்டாயமில்லை…கட்டாயமில்லை” என கத்திக் கொண்டேயிருக்கும் போது, வரிசையாக ஆதார் கார்டை பல சேவைகளுக்கு கட்டாயமாக்கி வருகிறது மத்திய அரசு. ஆதார் கார்டு வாங்குவதற்கும் சிரமமான புராசஸே இருந்தது. இப்போதுதான் கொஞ்சம் எளிதாக்கியிருக்கிறது அரசு. “ஆதார் கார்டு இருந்தால் தான் ஆதார் கார்டே தருவாங்க போல” என நெட்டிசன்ஸ் கலாய்த்தது எல்லாம் நடந்தது.

என்னிடம் ஆதார் கார்டு இருக்கே - என்கிறீர்களா? சற்று பொறுங்கள். அதோடு காரியம் முடியவில்லை. உங்கள் ஆதார் எண்ணை எல்பிஜி கணக்கோடு இணைத்து விட்டீர்களா? பான் நம்பருடன் சேர்த்தாச்சா? உங்கள் வங்கி கணக்கில் ஆதார் ஐக்கியமாகிவிட்டதா? ரேஷன் கார்டு?

ஆதார் வாங்குவது சின்ன வேலை. மேலே சொன்னதுதான் பெரிய வேலை.

முக்கியமா க, இ-ஆதார் கார்டை டெளன்லோடு செய்துகொள்ளவும். தபாலில் ஆதார் கார்டு வந்திருந்தாலும், இ-ஆதார் கார்டை டெளன்லோடு செய்து மொபைலிலோ, மின்னஞ்சலிலோ வைத்துக் கொள்வது நல்லது. அதற்கான இணைப்பு

ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க, உங்கள் இணைய கணக்கு வழி செய்யலாம். அல்லது, நேரிடையாக வங்கிக்கு சென்று இணைக்கலாம். சில வங்கிகள் ஏடிஎம் மூலம் ஆதார் எண்ணை இணைக்கவும் வசதி செய்திருக்கிறார்கள்.

ஆதார் எண்ணை எல்பிஜி கணக்குடன் இணைக்க 1800-2333-555  என்ற எண்ணை அழைக்கலாம். அல்லது டீலரிடம் சென்று  ஃபார்ம் நம்பர் 2 வாங்கி  பூர்த்தி செய்து கொடுக்கலாம். இது தவிர அந்தந்த இணையதளம் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவை மூலமும் இணைக்கலாம்.

ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க, ரேஷன் கடைக்கு சென்றுதான் ஃபார்ம் வாங்க வேண்டும்.

ஆதார் கார்டை பான் நம்பருடன் (Pan number) இணைக்க முதலில் இந்த பக்கத்தில் லாக் இன் செய்யவும். அப்போதே ஒரு பாப் அப் வந்து “ஆதாரை இணைக்க வேண்டுமா” என கேட்கும். ஆம் என்றால்,பெயர், பிறந்த தேதி இன்னும் சில தகவல்களை கொடுக்க வேண்டும். அவையும், ஆதார் எடுத்த போது கொடுத்ததும் பொருந்திப் போனால், ஆதார் எண்ணை கேட்கும். அதை டைப் செய்தால் முடிந்தது வேலை.

எளிதான புராசஸ் தானே? வெயிட்.

பான் நம்பர் எடுத்த போது உங்களை பெயரை இனிஷியலோடு கொடுத்திருக்கலாம். ஆதார் எடுத்த போது பாஸ்போர்ட்டில் இருப்பது போல் கொடுத்திருக்கலாம். அதாவது , R. Ashwin என பான் கார்டில் இருக்கும். பாஸ்போர்ட்டில் Ravichandran ashwin என இருக்கும். இந்த மாதிரி கொடுத்திருந்தால் ஆதார் எண்ணை பான் நம்பரோடு இணைக்க முடியாது.

இதே போல திருமணத்துக்கு பிறகு சிலர் பெயரில் மாற்றங்கள் கொண்டு வந்திருக்கலாம். அவர்களாலும் இணைக்க முடியாது.

சமீபத்தில் தான் வருமான வரித்துறை பான் கார்டில் இனிஷியலை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அதன்படி, ஒருவரின் முழுப்பெயர் திருமலை ராமதாஸ் என்றால், அவர் பெயரை ராமதாஸ் என்றோ அல்லது ஆர்.திருமலை என்றோதான் பான் கார்டு ஏற்கும். ஆதார் கார்டில் முழுப்பெயரும் சேர்க்க முடியும். அப்படி பெயரில் மாற்றம் இருந்தால் பான் நம்பருடன் ஆதாரை சேர்க்க முடியாது.

அதனால் என்ன பான் கார்டில் பெயர் மாற்றிக் கொள்ளலாமே… ஆனால், ஜூலை ஒன்று முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் இணைக்கப்பட வேண்டியது கட்டாயம். அதற்குள் எத்தனை பேர் இந்த மாற்றத்தை செய்ய வேண்டியிருக்கும் என யோசிக்க வேண்டும். மேலும், அரசின் கவனக்குறைவு இது. இதற்காக பொதுமக்கள் ஏன் அல்லல் பட வேண்டும்?

ஆதார் கார்டு விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆகும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.