பரிசுகளுக்கும் வருமான வரிச் சலுகை

பரிசுகளுக்கும் வருமான வரிச் சலுகை: பக்காவாகப் பயன்படுத்தினால் லாபம்!


நமது கலாசாரம் பல பண்டிகை களோடும் விழாக்களோடும் பின்னிப் பிணைந்ததாகும். குடும்ப விழாக்களில் மற்றும் பண்டிகை நாட்களில் பெரியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பரிசுகள் தருவது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற பரிசுகள் அதிக மதிப்புடையதாக இருக்கின்றன. ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய கிஃப்டுகளுக்கும் வருமான வரி உண்டு என்பது பலருக்குத் தெரிய வில்லை. இந்த வரி பற்றி விவரமாக இனி பார்ப்போம்.

நடப்பு நிதியாண்டில் ஒருவருக்கு ரூ.2.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரிவிலக்கு உண்டு. இதுதவிர, பரிசாக (கிஃப்ட்) ஒரு லட்சம் வரையிலான தொகைக்கு (ரூ.50,000 ரொக்கமாக, ரூ.50,000 பொருளாக) வரிவிலக்கு உண்டு.  வருமான வரிச் சட்டப் பிரிவு 56 (2) விதியின்படி, ரூ.50,000-க்கு மேல் பரிசாக வாங்கினால் (ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ), அது ‘இதர வருமானம்’ என்ற வகையின் கீழ் தனிப்பட்ட நபர் / இந்து கூட்டுக் குடும்ப (HUF) விதிமுறை களின் கீழ் வரி விதிக்கப்படும். இந்த வரி என்பது அவரவர் அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப இருக்கும். இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.

1. கிஃப்ட் ரூ.50,000 வரை வரி கிடையாது!

தனிநபர்/ இந்து கூட்டுக் குடும்பத்தினர் ஓராண்டில் ரூ.50,000 வரை பரிசை யாரிடம் இருந்தும் ரொக்கமாகப் பெற்றிருந்தால் வரி கிடையாது. அதேபோல், ஓராண்டில் ரூ.50000 வரை பரிசை பொருளாகப் பெற்றாலும் வரி கிடையாது. ஆக மொத்தம், ரூ.1 லட்சம் வரை பெறும் பரிசுக்கு வரி கிடையாது.ஆனால், உறவினர் அல்லாதவர் களிடமிருந்து கிடைக்கும் பரிசு ரூ.50,000க்கு மேற்பட்டால், மொத்த தொகைக்கும் வரி உண்டு என்பதை எச்சரிக்கை உணர்வுடன் புரிந்து கொள்வது அவசியம்.



உதாரணமாக, உங்கள் நண்பர் ரூ.30,000 பரிசுப் பொருள் கொடுத்தால், ரூ.30,000-க்கு வரி கிடையாது. மேலும், ரூ.20,000-க்கு பரிசு பொருள் கொடுத்தால், இதற்கும் வரி கிடையாது.

மேலும் ரூ.10,000-க்கு உங்கள் நண்பர் ஒரு பரிசு பொருள் கொடுத்தால், மொத்தப் பரிசுத் தொகையான ரூ.60,000க்கும் வரி உண்டு. 1-10-2009-லிருந்து பரிசுப் பொருள்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் அடங்கும்.

 2. நெருங்கிய உறவினர் யார்?

நெருங்கிய உறவினர்கள் தரும் ரொக்கம் அல்லது பொருள் பரிசுக்கு வரி கிடையாது. நெருங்கிய உறவினரிட மிருந்து ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ எவ்வளவு பெற்றாலும் வரி கிடையாது. வருமான வரி சட்டப்படி கீழ்க்கண்டவர்கள் மட்டும் தான் நெருங்கிய உறவினர்களாகக் கருதப்படுவார்கள்.

அப்பா, அம்மா, மகன், மகள், மருமகள், மருமகன், மாமனார், மாமியார், பெரியப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேத்தி, பேரன், தாத்தா, பாட்டி, சகோதரியின் கணவர், அம்மாவின் தங்கை கணவர், மனைவியின் தம்பி (மச்சான்), மனைவி யின் தம்பி மனைவி, மனைவியின் தங்கை (கொழுந்தியாள்) அப்பாவின் சகோதரனின் மனைவி (பெரியம்மா/ சித்தி), கணவனின் தம்பி (கொழுந்தனார்), அப்பாவின் சகோதரியின் கணவர், கணவரின் சகோதரி (நாத்தனார்), அப்பாவின் சகோதரி (அத்தை), அம்மாவின் தம்பி (மாமா), அம்மாவின் சகோதரனின் மனைவி, அம்மாவின் சகோதரிகள், கணவனின் சகோதரரின் மனைவி.

இந்த நெருங்கிய உறவுமுறைகளைச் சட்டென ஞாபகம் வைத்துக்கொள்ள எளிய வழி,
எனக்கு மேலே - தாய், தந்தை, தாத்தா, பாட்டி.
எனக்குக் கீழே - மகன், மகள், பேரன், பேத்தி.
எனக்கு இடது பக்கம் - மனைவி, மாமியார், மாமனார்.
எனக்கு வலது பக்கம் - அண்ணன், தம்பி, அக்கா, தங்கை.



உதாரணம்: வீடு வாங்க,  உங்களுடைய அப்பா/அம்மா/சகோதர/சகோதரிகள் உங்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சம் செலுத்தினால், அதற்கு வரி கிடையாது. ஆனால், பிற்காலத்தில் வீடு எப்படி வாங்கப்பட் டது என்ற கேள்வி எழும்போது அதற்கு உண்டான சரியான தஸ்தாவேஜுகளை (Documents)  ஏற்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.

உறவினரிடம் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் ரொக்கமாகவோ / பொருளாகவோ பரிசு வாங்கும்போது அதை  உறுதிப்படுத்துகிற  வாக்குமூலம் (Confirmatory Affidavit) பரிசு பெற்றவர் மற்றும் கொடுப்பவரின் கையொப்பத் துடன் இருப்பது நல்லது.

3. கல்யாண பரிசு!

கல்யாண பரிசாக ரொக்கமோ / பொருளோ எவ்வளவு பெற்றாலும் வரி கிடையாது.

ரொக்கமோ / பொருளோ உச்ச வரம்பின்றி உறவினர்கள், நண்பர்களிட மிருந்து கல்யாண பரிசைப் பெற்றால், அதற்கு வரி கிடையாது. இந்தப் பரிசு திருமணத்தின்போது (நிச்சயதார்த்தம், வரவேற்பு, திருமணம்) எந்தச் சந்தர்ப்பத்தில் கொடுத்ததாகவும் இருக்கலாம்.
இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது என்னவென்றால், பரிசுகளின் பதிவை வகை வாக்கு மூலத்தை (declaratory affidavit) பத்திரப்படுத்தி வைப்பது அவசியம்.

4. அசையாச் சொத்து பரிசு!

மேலே குறிப்பிட்டுள்ள உறவினர் களிடமிருந்து மனை, வீடு போன்ற அசையாச் சொத்துகள் பரிசாக வந்தால் வரி கிடையாது. இதற்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது.

அதேநேரத்தில், உறவினர் அல்லாதவர்களிடமிருந்து பரிசாகக் கிடைக்கும் அசையாச் சொத்து மதிப்பு ரூ.50,000-க்கு (முத்திரைத்தாள் மதிப்பு) மேல் இருந்தால், முழு மதிப்புக்கும் வருமான வரி உண்டு.

இதுவே, உறவினர் அல்லாதவர்கள் பொருளாகப் பரிசு கொடுத்தால், அதனுடைய நியாயமான சந்தை மதிப்பு (Fair Market Value) ரூ.50,000-த்தைத் தாண்டினால் முழு மதிப்புக்கும் வரி உண்டு.

5. சொத்து உயில் மூலமும்/பரம்பரையாகவும் வந்தால்!

உதாரணமாக, உங்களுக்கு ரூ.50 லட்சம் சொத்து உயில் மூலமாகவும், ரூ.30 லட்சம் சொத்து பாத்தியதை சொத்தாகவும் வந்தால், இந்த ரூ.80 லட்சத்துக்கும் வரி கட்ட வேண்டாம்.

 பதிவு செய்ய வேண்டும்!

பணமாகவோ/காசோலையாகவோ கொடுக்கப்பட்டதற்கு எந்த ஒரு பத்திரமும் வேண்டாம். ஆனால், அசையும் / அசையாச் சொத்துகள் வீடு/நிலபுலங்கள்/நகைகள் இவையெல்லாம் முத்திரைத்தாளில் எழுதிக் கொடுக்கலாம்.

நகைகளுக்குப் பதிவு தேவையில்லை. ஆனால், வீடு/நிலம் கொடுத்தால் முத்திரைத்தாளில் எழுதி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
 பரிசுகள் மூலம் கிடைக்கும் வரிச் சலுகைகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.